எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பதை தடுக்கவே பாஜ கட்சிக்கு சாதகமாக கருத்து கணிப்பு வெளியீடு : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை : எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பதை தடுக்கவே பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்து இருக்கிறது. சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, கருத்து கணிப்புகளில் மிகப் பெரிய வேறுபாடு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த கால தேர்தல்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகி உள்ளன என்றார் அவர்.மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்து தரப்பிலும் முழுமையாக நடத்தப்படவில்லை என்றும் கருத்துக்கணிப்பு விஞ்ஞானப் பூர்வமாக இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் ஒரு சார்பாக உள்ளதாகவும் இது போன்ற கருத்து கணிப்புகள் வெளியாக பாஜக ஏற்பாடு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மக்களிடம் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதற்காக பாஜக இவ்வாறு செய்வதாக தெரிவித்த அவர், வெறுமையாக உணர்ந்ததால் தான் மோடி இமயமலைக்கு சென்றார் எனவும் விமர்சித்தார். கெயில் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து பாமக மற்றும் அதிமுகவிடம் கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் தான் மோடிக்கு நெருக்கமானவர்கள் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி மூத்தத் தலைவர் இல. கணேசன் , நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வீழ்ச்சி அடையும் என்று தாம் ஏற்கனவே கூறி வந்தது உண்மை என்பதை கருத்து கணிப்புகள் காட்டுவதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கருத்து கணிப்புகளில் கூறப்பட்டதை காட்டிலும் குறைவான இடங்களே கிடைக்கும் என்று கூறினார்.

Related Stories: