அரசு வழங்கிய இலவச மடிக்கணினிகளை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா?: ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை : தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினிகள், மாணவர்களின் படிப்புக்கு எந்த அளவில் பயனுள்ளதாக இருந்தது என்பதை கண்டறியவும் அவற்றை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறார்களா அல்லது விற்று விட்டார்களா என்பதை கண்டறியவும் கணக்கெடுப்பு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. அதே போல பாலிடெக்னீக் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

 இலவச மடிக்கணினிகள் பெறும் மாணவர்களின் சுய விவரங்கள், ஆதார் எண் உள்ளிட்டவை ஈஎம்ஐஎஸ் எனப்படும் கலவி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த மடிக்கணினிகளை மாணவர்களை தவிர வேறு யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால் மாணவர்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்துள்ளன என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கேட்டுள்ளது. இதையடுத்து இலவச மடிக்கணினிகள் வாங்கிய மாணவர்களிடம் 14 வகையான தகவல்களை பெற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

*இலவச மடிக்கணினி வாங்கிய ஆண்டு, மாணவர் தற்போது தொடர்ந்து படிக்கிறாரா, சுயத்  தொழில் செய்கிறாரா, வேலை செய்கிறாரா உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

*பள்ளியில் எப்போது மடிக்கணினி வழங்கப்பட்டது, மடிக்கணினியை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா, படிப்பிற்கு தேவையான மென் பொருள் வழங்கப்பட்டதா, மடிக்கணினியில் உள்ள தக்வல்கள் படிப்பிற்கு பயன்பட்டதா என்பதையும் உரிய படிவத்தில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*வழங்கிய ஓராண்டுக்குள் மடிக்கணினிக்கு பழுது ஏற்பட்டதா, மாணவர்கள் தற்போது மடிக்கணினியை வைத்துள்ளனரா, மடிக்கணினியின் தற்போதைய பயன்பாடு என்ன, மேற்படிப்பிற்காக மடிக்கணினியை பயன்படுத்துகின்றனரா, வேறு யாருக்கும் கொடுத்து விட்டனரா அல்லது பழுதாகி உள்ளதா என்ற விவரங்களையும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: