வேலூர், திருத்தணியில் வெயில் 109 டிகிரி

சென்னை: வட மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் வேலூர், திருத்தணி, மதுரை ஆகிய இடங்களில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து வெயிலின் தாக்கம் மேலும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. 29ம் தேதி முடிகிறது. இதனால் தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இடையில் கடந்த வாரம் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் சில இடங்களில் மழை பெய்தாலும், வட மாநிலங்களில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கம் காரணமாக தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்திலும் வெயில் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, நேற்று அதிகபட்சமாக வேலூர், திருத்தணி,கரூர் ஆகிய இடங்களில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, மதுரை 106 டிகிரி, தஞ்சாவூர், தர்மபுரி, சேலம் 104 டிகிரி, சென்னை 102 டிகிரி வெயில் நிலவியது. இதற்கிடையே, தமிழகத்தில் சில இடங்களில் நேற்றும் இடியுடன் மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். இருப்பினும் வட மாநிலங்களில் நிலவும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் கூடுதலாகவே இருக்கும்.

Related Stories: