₹2131 கோடியிலான உலக வங்கியின் நிதியில் நடக்கும் நீர்வள நிலவள திட்ட பணிகளை மத்திய அரசு நிறுவனம் கண்காணிப்பு

* 7 ஆண்டு ஒப்பந்தத்துக்கு ₹10 கோடி

* உலக வங்கிக்கு நேரடியாக அறிக்கை தாக்கல் செய்யும்

சென்னை: நீர்வளநிலவள திட்டப்பணிகளை கூடுதலாக கண்காணிக்க வாப்காஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் திட்டப்பணிகளை கண்காணித்து உலக வங்கிக்கு நேரடியாக அறிக்கை தாக்கல் செய்யும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பாசன உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், நீர்வளநிலவள திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.2131 கோடி செலவில் 4778 ஏரிகள் மற்றும் 477 அணைக்கட்டுகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை நான்கு கட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.743 கோடி செலவில் 1,325 ஏரிகள், 109 அணைகட்டுகள், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள், 3 கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில், 780க்கும் மேற்பட்ட ஏரிகள் புனரமைப்பு பணிகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் மீதமுள்ள ஏரிகளின் புனரமைப்பு பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடந்து வருகிறது.

இதற்கிடையே அடுத்த கட்டமாக 1,400 ஏரிகள் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்கை தயாரித்து உலக வங்கியின் ஒப்புதலுக்காக அனுப்பும் வேலையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீர்வளநிலத்திட்டம் மூலம் நடந்து வரும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து இப்பணிகளை கண்காணிக்க கூடுதலாக உலக வங்கி சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நீர்வளநிலவள திட்ட பணிகளை கூடுதலாக கண்காணிக்க உலக வங்கி தனியார் கன்சல்டன்ட் நிறுவனத்தை அமைக்க உத்தரவிட்டது. அந்த குழுவிற்கு 7 ஆண்டுகளுக்கு ரூ.10 கோடி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, உலக வங்கி ஒப்புதல் கேட்டு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில் உடனடியாக பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. இதில், 3க்கு மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தது. இதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாப்காஸ் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தலுக்கு பிறகு அந்த நிறுவனத்துடன் பொதுப்பணித்துறை ஒப்பந்தம் போடுகிறது. ெதாடர்ந்து அந்த நிறுவன ஊழியர்கள் ஏரி உள்ளிட்ட பல்ேவறு புனரமைப்பு பணிகளை கண்காணித்து உலக வங்கிக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தம் போட்டு தேர்வு செய்யப்பட்ட அந்த நிறுவனம் முறையாக பணிகள் நடைபெறுகிறதா என்று சுட்டிகாட்டி உலக வங்கிக்கு அறிக்கை தாக்கல் செய்யுமா என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: