குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் வீனஸ் டிட்டி தோட்டம், ஜானகிராமன் நகர் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில், பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை பெண்கள் குடிநீர் பிடித்தபோது குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது.

அதிர்ச்சியடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து செம்பியம், திருவிக நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம், குடிநீர் வாரிய அதிகாரி பானுபிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதியளித்தார். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

Related Stories: