40 குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பம் தொழில்நுட்ப நிபுணர் குழு ஜூன் 1ல் கூடுகிறது: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை:  தமிழகம் முழுவதும் 40 எம்சாண்ட் குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் ஜூன் 1ம் தேதி முதல் தொழில்நுட்ப நிபுணர் குழு கூட்டம் நடைபெறுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் எம்சாண்ட் குவாரிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் மதிப்பீட்டு சான்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் 1,300க்கும் மேற்பட்ட எம்சாண்ட் குவாரிகளுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியது. இந்த நிலையில் தற்போது வரை 200 குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளன. இந்த குவாரிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட குவாரிகளின் அறிக்கையை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, இந்தியன் மிலிட்டரி சர்வீஸ் உள்ளிட்ட 14 பேர் கொண்ட தொழில் நுட்ப வல்லுனர் குழு கூட்டத்தில் வைத்து மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டது. தற்போது, வரை 112 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேலும், 40 குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தொழில் நுட்ப வல்லுனர் கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 27ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்து விடுகிறது. எனவே, வரும் ஜூன் 1ம் தேதி தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு கூட்டத்தை நடத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே மதிப்பீடு சான்று பெற்ற எம்சாண்ட் குவாரிகள் செயற்கை மணல் விற்பனை செய்யும் போது, பொதுப்பணித்துறை ஒப்புதல் பெற்ற நகல் கடிதம், ஆய்வறிக்கையுடன் சேர்த்து பில் தர வேண்டும் என்று அந்த குவாரிகளுக்கு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: