சென்னையில் குடிநீர் பற்றாக்குறை எதிரொலி ஐ.டி. நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்: கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மட்டுமே தீர்வு

சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஐடி நிறுவனங்களும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களையும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் தொடர்ந்து வற்றி வருகின்றன. இதனால் சென்னை குடிநீர் வாரியமும் இந்த தண்ணீர் பற்றாக்குறையை சாமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் நொந்துபோயிருப்பவை தென் சென்னையில் குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களும், கார்ப்பரேட் அலுவலகங்களும்தான். மத்தியகைலாசில் இருந்து புதூர் வரை சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் 3 லட்சம் தனி வீடுகளும், 12.5 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இவர்களின் ஒரு நாளைய தண்ணீர் தேவை 3 கோடி லிட்டர். இந்த பகுதியில் 600 ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 3.2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் தண்ணீர் தேவை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மக்களின் குடிநீர் தேவையில் 60 சதவீதமாகும்.

இதுவரை தனியார் தண்ணீர் லாரிகளை நம்பியே இருந்து வந்த இந்த ஐடி நிறுவனங்கள் தற்போது தனியார் நிறுவனங்களிடம் தண்ணீர்பெற 3 நாட்களுக்கும் மேல் காத்திருக்க வேண்டியுள்ளது என்று ஒரு ஐடி நிறுவன அதிகாரி தெரிவித்தார். இதே நிலை நீடித்தால் இன்னும் 10 நாட்களில் தனியார் லாரிகள் தண்ணீர் சப்ளையை நிறுத்திவிட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் நிலத்தடி நீரின் கடுமைத் தன்மை அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரை கட்டிட பணிகளுக்குகூட பயன்படுத்த முடியாது. ஒரு லிட்டர் தண்ணீரில் 3000 மில்லிகிராம் கடுமைத் தன்மை உள்ளது. இந்த தண்ணீரை ஆர்ஓ மூலம் சுத்தப்படுத்தினால் பெரும்பகுதி தண்ணீர் வீணாகும். அந்த கழிவு தண்ணீரை எந்த காரியத்திற்கும் பயன்படுத்த முடியாது. இந்த தட்டுப்பாட்டிலிருந்து மீள்வதற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்தான் ஒரே வழி என்று கூறப்படுகிறது. தற்போது பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நெமிலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் பிளாண்ட் மூலம் கிடைக்கும் தண்ணீர் ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்த தண்ணீரை எங்கள் பகுதிக்கு தந்தால் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள குடியிருப்புகளும், ஐடி நிறுவனங்களும் தப்பிவிடும் என்று அந்த பகுதி குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் பிரச்னை யால் ஐ.டி. நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நிறுவனமும் குடிநீர் தட்டுப்பாட்டால் மூடப்படவில்லை. ஆனால், சில நிறுவனங்கள் மூடுவதற்கு தயாராக உள்ளன என்று ஒரு பிரபல ஐடி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: