சேலம் குட்கா வியாபாரியிடம் ஹவாலா பணம் பறிமுதல்

சேலம்: தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளதால் சேலம் வடக்கு தொகுதி பறக்கும்படை அதிகாரிகள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சந்தைப்பேட்டை காளியம்மன் கோயில் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 ரூபாய் கட்டுகளாக ₹49 லட்சம் இருந்தது. இதுகுறித்து காரில் வந்த செவ்வாய்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமாரிடம் விசாரித்தனர். அவர் டீத்தூள் வியாபாரத்திற்காக திருப்பதிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அவரிடம் பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை ேபாலீசாரின் விசாரணையில் மகேந்திரகுமார் குட்கா வியாபாரி என்பது தெரியவந்தது. வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி வந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரணை நடத்தினர். இதில் மகேந்திரகுமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரகுமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ₹49 லட்சத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

Related Stories: