சேலம் ரயில்களில் பெண்களிடம் நகை பறிப்பு.. கொள்ளை கும்பல் தலைவனை பிடிக்க மகாராஷ்டிராவில் தேடுதல் வேட்டை: தனிப்படை போலீசார் தீவிரம்

சேலம்: சேலம் அருகே ரயில் பயணிகளிடம் நகை பறித்த வழக்கில், கொள்ளைக்கும்பல் தலைவனை பிடிக்க மகாராஷ்டிராவில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவெலிப்பாளையம் வழியாக, கடந்த 4 மற்றும் 5ம் தேதியில் சென்ற ரயில்களில், 13 பெண்களிடம் 37 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நகை பறிப்பில், வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதன்பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த 6 பேரை பிடித்தனர்.

கர்நாடகா மாநிலம் மங்களூரில் சிக்கிய அவர்களை தமிழகம் கொண்டு வந்து, கோவை ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீசார், தீவிர விசாரிக்கின்றனர். இதனிடையே, இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட நபர், மகாராஷ்டிரா தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து கும்பல் தலைவனையும், அவனது கூட்டாளிகளையும் பிடிப்பதற்காக, ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி தலைமையிலான தனிப்படையினர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் சென்றுள்ளனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஓரிரு நாளில் கொள்ளை கும்பலை கூண்டோடு கைது செய்து விடுவோம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: