உபி.யில் ரேபரேலி தொகுதியின் பெண் எம்எல்ஏ மீது தாக்குதல்: பிரியங்கா கடும் கண்டனம்

ரேபரேலி: ‘‘ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் மீதான தாக்குதலானது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்,’’ என பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதி காங்கிரஸ் பெண் எம்எல்ஏ அதிதி சிங். நேற்று முன்தினம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அவதீஷ் பிரதாப் சிங்குக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது.

இதில் பங்கேற்க எம்எல்ஏ அதிதி சிங் காரில் சென்ற போது அவர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எம்எல்ஏவை தாக்குவதற்காக ஒரு கும்பல் செங்கல், கம்பு உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளது. காரின் மீது கற்கள் வீசப்பட்டதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, பாஜ.வை சேர்ந்த அவதீஷ் சிங் மற்றும் அவரது சகோதரர் தினேஷ் சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ரேபரேலியில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த காங்கிரசின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். முன்னெப்போதும் இதுபோன்ற தாக்குதல் நடந்ததில்லை. இத்தாக்குதலில் நாட்டு துப்பாக்கி, செங்கல், உருட்டுக்கட்டை போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஓட்டு போடச் சென்ற சில பஞ்சாயத்து உறுப்பினர்கள் அவர்களின் வாகனத்திலிருந்து இழுத்து தள்ளப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். இதை நாங்கள் சும்மா விட மாட்டோம். கவர்னரிடம் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். தேவைப்பட்டால் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்போம்,’’ என்றார்.

வாரணாசியில் பிரசாரம் துவங்கினார்

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இங்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மாலை சாலை பேரணி மூலம் வாக்கு சேகரித்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தின் முன்பு இருந்து அவரது பேரணி தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: