நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் 4 வழிச்சாலைக்கு எதிராக மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: நீர்நிலைகள் அழிக்கப்படுவதால், நான்கு வழிச்சாலை பணிக்கு எதிராக திமுக எம்எல்ஏ ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த 2008ல் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தி, பலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், 2 தடங்களில் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பு வெளியானது.

இதன்படி, காரோடு - கன்னியாகுமரி இடையிலான 56 கிமீ தூரத்திற்கும், நாகர்கோவில் - காவல்கிணறு இடையிலான 16 கிமீ தூரத்திற்கும் புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கும்பணி நடந்து வருகிறது. இந்த தடங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 25 வருவாய் கிராமங்களில் உள்ள 76 நீர்நிலைகள் மற்றும் 368 கால்வாய்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த சுற்றுப்பகுதியின் நீராதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீர் மற்றும் பாசன வசதி முழுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நான்குவழிச்சாலை அமைக்கும் பகுதிகளில் 14,273 மரங்களை அகற்ற அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், இந்த பகுதிகளில் இருந்த சுமார் 1 லட்சத்து, 69 ஆயிரத்து 415 மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

நீர்நிலைகளை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டிய அரசே, நீர்நிலைகளை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள தடத்தில் நான்கு வழிச்சாலைக்கான பணிகளை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக நீர்நிலைகளை அழித்து, புதிதாக சாலை அமைக்கும் பணி ஏற்புடையது அல்ல. இந்த பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், மனு குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், சாலை போக்குவரத்து துறை செயலர், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இயக்குனர் (ஜெனரல்), மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர், கன்னியாகுமரி கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: