குடிநீரை பொதுமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்துமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மேகேஸ்வரன் இதனை அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மழையளவு வழக்கத்தைவிட 69% குறைந்து உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சியான சூழல் காணப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சீரான முறையில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், குடிநீர் வாரியம் வழங்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 550 கூட்டு குடிநீர் திட்டங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலமாக 4 கொடியே 23லட்சம் மக்கள் தினமும் பயன்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, இந்த ஆண்டு மட்டும், சராசரியாக 1,856 மில்லியன் லிட்டர் தண்ணீரானது தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடிநீரானது, கடைக்கோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள தமிழகம் முழுவதும் வாரியத்தின் மூலம் 258 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் தண்ணீர் கசிவுகள், உடைப்புகள் இருந்தால் உடனடியாக 9445802145 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர் தர பரிசோதனை கூடம் உள்ளதாகவும் அதில் பொதுமக்கள் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் 960 மில்லி மீட்டர் பெய்ய வேண்டிய மழை 811.7 மில்லி மீட்டர் மட்டுமே பெய்ததாகவும், 2019 ஜனவரி முதல் மே வரை 108 மி.மீட்டர் பெய்ய வேண்டிய மழை 34 மி.மீ மட்டுமே பெய்துள்ளது என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் தமிழ்நாடு குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

Related Stories: