நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு பொது ஒதுக்கீட்டில் வீடு: தமிழக அரசு முடிவு

சென்னை: மூத்த அரசியல்வாதி நல்ல கண்ணு மற்றும் கக்கனின் குடும்பத்தினருக்கு பொது ஒதுக்கீட்டில் வாடகைக்கு வீடு வழங்க என்று தமிழக முடிவு செய்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல்வாதியுமான நல்லகண்ணுக்கு (94) அரசு சார்பில் 2007ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாடகை கொடுத்து 12 ஆண்டுகளாக நல்லகண்ணு இங்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அரசிடம் மாற்று வீடு கேட்காமல் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் நல்லகண்ணுவும் வெளியேறினார். கே.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் இப்போது வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அரசின் இச் செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அவருக்கு மாற்று வீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நல்லக்கண்ணுவிடம் தொலைபேசியில் பேசினார். நல்லகண்ணுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே போன்று அரசு குடியிருப்பில் இருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட கக்கன் குடும்பத்துக்கும் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: