‘அதிமுகவுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தார்’ அமமுக வேட்பாளருக்கு அமைச்சர் கருப்பணன் ஆதரவு: அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு

ஈரோடு: ``திருப்பூர் அமமுக வேட்பாளருக்கு அமைச்சர் கருப்பணன் ஆதரவாக செயல்பட்டார்’’ என்று பெருந்துறை எம்எல்ஏ தோப்புவெங்கடாசலம் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார்.ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளராக உள்ள அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. அமைச்சர் கருப்பணன் கட்சி விரோத  செயலில் ஈடுபடுவதாகவும், அவரிடமிருந்து கட்சி பதவி மற்றும் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி மற்றும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம்  தோப்பு வெங்கடாசலம் புகார் கொடுத்தார். கட்சி தலைமை அமைச்சர் கருப்பணனிடம் விசாரணை நடத்தியது. இதனால் எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில், மக்களவை தேர்தலில் அமைச்சர் கருப்பணன் அதிமுகவுக்கு எதிராக வாக்கு கேட்டதாக மீண்டும் தோப்புவெங்கடாசலம் புகார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து நேற்று பெருந்துறையில், தோப்பு வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:

 மக்களவை தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு  ஆதரவாக பெருந்துறை தொகுதி முழுவதும் நானும் தொண்டர்களும் வேலை செய்தோம். ஆனால் தொகுதியின் மாவட்ட செயலாளரும்  அமைச்சருமான கருப்பணன் அ.தி.மு.க.வுக்கு வாக்கு கேட்காமல் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக உள்ளடி வேலை செய்து வருகிறார். இது இங்குள்ள அதிமுக தொண்டர்கள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும்  அப்பட்டமாக தெரியும். அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கட்சிக்கு எதிராக பணியாற்ற அவரது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டார். அரசு ஆஸ்பத்திரி அருகே பட்டாசுகள் வெடிப்பது, பாலிதீன் அடைத்த குடிநீரை வினியோகிப்பது என  மக்களுக்கு அதிமுக மீது வெறுப்பு வரும்படி அமைச்சர் கருப்பணன் செயல்படுகிறார்.எல்லா விவரங்களையும் ஆதாரத்துடன் சேகரித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அனுப்பி உள்ளேன். தேவைப்பட்டால்  பொதுமக்கள் மத்தியிலும் அவற்றை வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: