மத்திய அரசுக்கும், அட்டார்னி ஜெனரலுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக ஆதாரமற்ற தகவல்: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

டெல்லி: மத்திய அரசுக்கும், அட்டார்னி ஜெனரலுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக, உள்நோக்கத்துடன் அடிப்படை ஆதாரமற்ற தகவல் பரப்பப்படுவதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியிருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் அளித்த புகாரை, மூன்று நீதிபதிகள் குழு விசாரித்து தீர்ப்பளித்தது. இந்த குழுவில் சில திருத்தங்கள் கோரி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 27 பேருக்கு, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனித்தனியே, இருமுறை, கடிதங்கள் எழுதினார். இவை, அவரது சொந்த கருத்து எனக்கூறி, பிரச்சனையிலிருந்து மத்திய அரசு ஒதுங்க நினைத்ததாகவும், இதனால், பரஸ்பரம் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அரசுக்கும், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கும் இடையே, கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியாகும் தகவல், உள்நோக்கத்துடன் கூறப்படும் தவறான தகவல் எனக் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்ற பார் கவுன்சிலின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவரான, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் கருத்திற்கு, மத்திய அரசு எப்போதும் மதிப்பளிப்பதாக அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: