கரூர் அருகே பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வரும் பழமை மாறாத பயணியர் நிழற்குடை

கரூர் :   கரூர் அருகே பழமை வாய்ந்த நிழற்குடையை பொதுமக்கள் பராமரித்து வருகின்றனர். இதில் தாகம் தணிக்க மண்பானையில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நிழற்குடையில் அமர்ந்து மது அருந்தக்கூடாது என்ற போர்டும் தொங்கவிடப்பட்டுள்ளது.  க.பரமத்தியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் பயணியர் நிழற்குடை நீண்டகாலமாக இருந்து வருகிறது. மாட்டு வண்டிகளில் மக்கள் பயணித்த போதே இந்த நிழற்குடை கட்டப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

பேருந்து போக்குவரத்து என வசதிகள் வந்துவிட்ட நிலையிலும் பழமை மாறாமல் பயணியர் நிழற்கூடத்தை மக்கள் பராமரித்து வருகின்றனர். கல்தூண்களுடன் ஓடுகள் வேயப்பட்ட இந்த நிழற்கூடத்தில் குடிநீர் தாகத்தை போக்க வசதியாக மண் பானையில் குளிர்ந்த நீர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலத்தில் சுமையை சுமந்துகொண்டு செல்பவர்கள் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறுவார்கள்.

சுமையை வைப்பதற்கான சுமை தாங்கி கல்லும் நிழற்கூடத்தின் முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது. மது அருந்துவதற்கு தடை என அறிவிப்பினை தொங்க விட்டுள்ளனர். இப்பகுதிமக்கள் ஒத்துழைப்புடன் பழமை மாறாமல் இந்த நிழற்குடை பராமரிக்கப்பட்டு வருகிறது. மினி பேருந்துகள் நகர பேருந்து இப்பகுதி வழியாக சென்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: