கோவை: கோவை உக்கடம், சுங்கம் மேம்பாலம் கட்டுமான பணி மந்தகதியில் நடந்து வருகிறது. கோவை திருச்சி சாலையில் சுங்கம் பகுதியில் ரூ.253 கோடியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாடப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த மேம்பாலம், 30 அடி அகலம், 3.6 கி.மீ நீளத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒருபுறம் திருச்சிரோடு அல்வேனியா பள்ளி அருகே நிறைவுபெறுகிறது. இன்னொருபுறம், திருச்சி ரோடு ஹைவேஸ் காலனி அருகே நிறைவுபெறுகிறது. இந்த மேம்பாலம் கட்டுவதற்கு 120 தூண்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது, முதல்கட்டமாக 6 தூண்களுக்கான பவுண்டேஷன் பணி நிறைவுபெற்றுள்ளது. இதேபோல், உக்கடத்தில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம்தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பாலம், 1.95 கி.மீ நீளத்துக்கு கட்டப்படுகிறது. முதல்கட்டமாக, 55 தூண்கள் அமைப்பதற்கான பணி நிறைவுபெற்றுள்ளது. இவ்விரு பாலம் கட்டுமான பணிகள் மந்த நிலையிலேயே நடக்கிறது.