பாஜகவை தாக்கும் காவி அஸ்திரம்.... காங்கிரசுக்கு ஆதரவாக 7000 சாமியார்கள் ஹட் யோகா வழிபாடு : போபாலில் சுவாரஸ்யம்!

போபால் : மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங்கிற்கு ஆயிரக்கணக்கான இந்து சாமியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போபால் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங் களமிறங்கியுள்ள நிலையில், தற்போது அந்த தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது. இதன் காரணமாக போபால் தொகுதியில் பிரச்சார அனல் பறக்கிறது. இந்துத்துவாவை முன்னிறுத்தி சாத்வி பிரக்யா பிரசாரங்களை நடத்தி வரும் நிலையில், அவருக்கு இந்து சாமியார்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்தான் இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என விரும்புவதாக கம்ப்யூட்டர் பாபா எனும் முன்னணி சாமியார் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நர்மதாவின் நிஜமான பக்தர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் தான் என்று அழுத்தமாக கூறுகிறார். பிரக்யா சிங் ஒரு சாமியார் என்று அழைக்க தகுதி இல்லாதவர் என்றும், குண்டுவெடிப்பு, கொலை போன்றவற்றில் தொடர்பு உள்ளவர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்கரே குறித்து மோசமான கருத்துகளை பிரக்யா சிங் தெரிவித்தார் என அவர் கூறினார்.

ராமர் கோயில் கட்டப்படவில்லையென்றால் மோடி அரசாங்கமும் இல்லை என கூறிய கம்ப்யூட்டர் பாபா, நர்மதா நதியை வழிபட திங் விஜய் சிங் உரிய வசதி ஏற்படுத்தி கொடுத்தவர் என்பதால் அவருக்கே எங்கள் ஆதரவு என்று தெரிவித்தார். மேலும் ஆதரவு மட்டுமின்றி கம்ப்யூட்டர் பாபாவுடன் சேர்ந்து சுமார் 7 ஆயிரம் இந்து துறவிகள் ஹட் யோகா என்ற ஒரு வழிபாட்டை இன்று நடத்தினர். திக்விஜய் சிங் வெற்றிக்காக நடத்தப்பட்ட இந்த வழிபாட்டில் அவரும் பங்கேற்றார். நெருப்பை மூட்டி நடுவே அமரும் வகையிலான கடுமையான வழிபாட்டை சாமியார்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. காவி உடை தரித்த பிரக்யா சிங் தாக்கூரை கொண்டு இந்துக்கள் வாக்குகளை கவர பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான சாமியார்கள் அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது போபால் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: