வேட்புமனு நிராகரிப்பை ரத்து செய்யக்கோரி மோடியை எதிர்க்கும் வீரர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: எல்லையில் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவு தரங்குறைந்ததாக உள்ளதாக கூறி, கடந்த 2017ல் வீடியோ வெளியிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ். இவர் வாரணாசி  தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து  போட்டியிடுகிறார்.     கடந்த மாதம் 29ம் தேதி தேஜ் பகதூர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் எதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி தேர்தல் அதிகாரி அவரது  வேட்புமனுவை நிராகரித்தார். இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாய் நடந்து கொள்கிறது. மனு நிராகரிப்பு முறையற்றது. வேட்பு மனுவுடன் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், முன்னாள் ராணுவ வீரர் ஒழுங்கீனமாக  நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் பணி நீக்கம் செய்யப்படுகிறார். ஊழலுக்காகவோ அல்லது அரசுக்கு விசுவாசமாக இல்லை என்பதற்காகவோ அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரணாசி தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளரான பிரதமர் மோடியை எளிதில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பிரதானமான இரண்டு எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற  வேட்பாளர் என்பதாலும் எனக்கு பெருகி வரும் ஆதரவைக் கண்டும் அஞ்சி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிலைக் கூட எதிர்பாராமல் மாநில தேர்தல் அதிகாரி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே தேர்தல்  ஆணையம் வேட்பு மனுவை நிராகரித்ததை ரத்து செய்யவும் வாரணாசி தொகுதியில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் யாதவ் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: