ஆம்பூர் ரெட்டிதோப்பு ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கும் கழிவுநீரில் நீந்தும் வாகனங்கள்

ஆம்பூர்: ஆம்பூர் ரெட்டிதோப்பில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய கழிவுநீரில் நேற்று வாகனங்கள் நீந்தி செல்லும் அவல நிலைக்கு அப்பகுதியினர் ஆளாகி உள்ளனர். ஆம்பூரின் வடக்கு பகுதியில் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரெட்டி தோப்பு பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், பல்வேறு தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியினர் தினமும் ஆம்பூர் ரயில்வே தண்டவாளத்தின் கீழ் உள்ள சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைகாலங்களில் தனி தீவாக மாறும் இப்பகுதிக்கு மேம்பாலம் அமைத்து தர நீண்ட நாட்களாக அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெத்லகேம், கம்பிகொல்லை, நதிசீலாபுரம், மாங்காதோப்பு ஆகிய நகர்ப்புற பகுதிகளும், இந்த பகுதி வழியாக மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாய்க்கனேரி ஊராட்சியில் உள்ள மலைகிராமங்களான நாய்க்கனேரி, சீக்க ஜூனை, பனங்காட்டேரி, ஆனைமடுகு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசித்து வரும் சுமார் 10 ஆயிரம் பேரும் சென்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் இந்த சுரங்கபாதையை தங்களது அன்றாட பணிகளுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனை, பஜார், பள்ளி, பஸ்நிலையம் ஆகியவற்றிற்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 110 விதியின் கீழ் உத்தரவிட்டதின் பேரில் அப்போதைய பொதுப்பணிதுறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமி இப்பகுதிக்கென ஒரு மேம்பாலம் அமைக்கப்படும் என சட்ட சபையில் அறிவித்தார். ஆனால், ஆய்வு பணிகளுடன் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. மழை காலங்களில் இப்பகுதிக்கு செல்லும் பெரும்பான்மையானோர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களுக்கு அடியில் உயிரை பணயம் வைத்து கடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பலனில்லை. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் கம்பிகொல்லையில் ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு வந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை அப்பகுதியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, நீலோபர் கபில் ஆகியோர் இந்த மேம்பாலத்தை உடனே அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றனர். ஆனால், மாதங்கள் பல ஆகியும் இதுவரை இதற்காக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் இந்த ரயில்வே சுரங்கப் பாதையில் கழிவு நீரானது தேங்கி குளம் போல காட்சியளித்தது. இதன் காரணமாக அப்பகுதியினர் வீடு திரும்ப இயலாமல் தவித்தபடி சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சுற்றியபடி வீடு சென்று சேர்ந்தனர். தொடர்ந்து கழிவு நீர் தேங்கியபடி இருப்பதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: