பானி புயல் பாதிப்பு ஒடிசா மாநிலத்துக்கு 10 கோடி நிவாரண நிதி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவாகியிருந்த அதிபயரங்கமான “பானி புயல்” ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி தாக்கியது. இதில் 14க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் பலத்த ேசதமடைந்தன. இந்த கோரத்தாண்டவத்தால் ஒடிசா மாநிலமே நிலைகுலைந்து போய் உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு பல்வேறு மாநிலங்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி, பொருள் உதவி செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பிலும் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:பானி புயலால் ஒடிசா மாநிலத்தில் பல மாவட்டங்களும், குறிப்பாக ஆன்மிக நகரமான பூரியும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. சூறாவளி காற்று, பலத்த மழையால் கடுமையான பாதிப்புகளை ஒடிசா மக்கள் சந்தித்துள்ளனர். புயலால் இறந்தவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேதத்தில் இருந்து மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர ஒடிசா அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் ஒடிசாவுக்கு உதவ வேண்டியது தமிழக அரசு, மக்களின் கடமை என்ற அடிப்படையில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒடிசாவுக்கு ரூ.10 கோடி நிவாரண உதவி வழங்கப்படுகிறது. மேலும் ஒடிசா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: