இலங்கையில் குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் ஸ்கேனர் கருவி: 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு; கோயிலை சுற்றி சிசிடிவி கேமரா

சென்னை: இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 331 முக்கிய கோயில்களில் நவீன ஸ்கேனர் கருவி வைக்கப்படுகிறது. மேலும், கோயிலை சுற்றி சிசிடிவி கேமரா வைக்கவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இலங்கையில் கடந்த 19ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுகள் வெடித்தது. இதில் 253க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த  சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை அந்தந்த மாநில அரசுகளுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன, சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டில் கோயில் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளதா? கோயிலில் உள்ள  குளத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார். அதன்பேரில் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அந்ெதந்த மாவட்ட உதவி கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார்,  வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையர் ஹரிகுமார், ராயப்பேட்டை  உதவி ஆணையர் கிருஷ்ண மூர்த்தி உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, கோயிலில் பொதுமக்கள் வந்து செல்லும் வழி மற்றும் வெளியே ெசல்லும் வழிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 331 முக்கிய கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் கோயில் நிர்வாக அலுவலர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில்,  பாதுகாப்பு ஏற்பாடு குறைபாடு உள்ள கோயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் மற்றும் அவர்களது முழு உடலையும் ஆய்வு செய்யும்  வகையில் நவீன ஸ்ேகனர் கருவி கோயில் வாசல்களில் வைக்கப்படுகிறது. மேலும், கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சிசிடிவி கேமரா வைக்கப்படுகிறது. கோயில்கள் அருகே உள்ள கடைகளும் பாதுகாப்பு கருதி  அகற்றப்படுகிறது. மேலும், முக்கிய கோயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து கோயில்களில் இந்த நவீன ஸ்கேனர் கருவி வைக்கப்படுகிறது  என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: