இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் காஷ்மீர், கேரளாவில் பயிற்சி பெற்றவர்கள் : இலங்கை ராணுவ தளபதி பேட்டி

கொழும்பு: இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்தியாவில் காஷ்மீர் மற்றும் கேரளாவில் பயிற்சி பெற்றவர்கள் என்று இலங்கை ராணுவ தளபதி மகேஷ் செனநாயகே கூறியுள்ளார். இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 45 சிறுவர்கள் உட்பட 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிரவாத தாக்குதல் நடந்து 2 வாரங்கள் ஆன நிலையில் இலங்கையில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. வழிபாட்டு தலங்கள், மற்றும் பள்ளி கூடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கொழும்புவில் உள்ள ஜும்மா மசூதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணித்து வருகின்றனர். இயல்பு திரும்பும் நிலையில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவின் காஷ்மீர், கேரளா, மற்றும் கர்நாடகாவுக்கு சென்று வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக இலங்கை ராணுவ தளபதி மகேஷ்செனநாயகே தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 பேர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்லீலா ஓட்டலில் தாக்குதல் நடத்திய ஜஹ்ரானின் மைத்துனரும் அவரது நண்பருமே கைதானவர்கள். இந்திய உளவுத்துறை அளித்த தகவலே இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: