சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்துதர தவறியதாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை : சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தராததற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுவுக்கு மாதம் ரூ.50,000 ஊதியம் மற்றும் ஓய்வூதியமாக ரூ. 70,000 வழங்கப்படுவதற்கான அரசாணைகளை தாக்கல் செய்தார்.

அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்கு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்ய தவறியதாக குறிப்பிட்ட நீதிமன்றம், அந்த அலுவலகத்திற்கு இருக்கைகள் கூட வழங்கப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தேவையான வசதிகள் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி அரசு அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: