தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய ராணுவ வீரர்...சமாஜ்வாதி கட்சி சார்பில் மோடிக்கு எதிராக போட்டி!

லக்னோ: தரமற்ற உணவு குறித்து புகார் கூறிய ராணுவ வீரர், மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மோடிக்கு எதிராக போட்டியிடவுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு உணவு சரியாக வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து, தேஜ் பகதூர் யாதவ் ராணுவத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய தேஜ் பகதூர் யாதவ், ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான். எனவே, வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி கடந்த 26ம் தேதி இங்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: