ராசிபுரத்தில் குழந்தைகளை விற்ற நர்ஸ் கைது விவகாரம்: உடந்தையாக இருந்த மற்றொரு நர்சும் சிக்கினார்

* வங்கி கணக்குகளின் விவரம் சேகரிப்பு

* கிராமங்களில் தனிப்படை விசாரணை

ராசிபுரம்: ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்த விவகாரத்தில், கைதான நர்சுக்கு உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர், தனியார் மருத்துவமனை நர்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வாட்ஸ்அப்பில் குழந்தைகளை விலை பேசி விற்றதாக, ராசிபுரம் தட்டாங்குட்டை காட்டுக்கொட்டாய் காட்டூரை சேர்ந்த நர்ஸ் அமுதவள்ளி(50), அவரது கணவர் ரவிச்சந்திரன் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘புகாருக்குள்ளான அமுதவள்ளி, சேலம், பள்ளிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக நர்சாக பணியாற்றி விட்டு, கடந்த 2012ல் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணியாற்றிய போது, விருப்ப ஓய்வு பெற்றார். சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் குழந்தையை வாங்கி, ஓமலூர் பேரூராட்சியில் பதிவு செய்து, மேட்டூரில் உள்ள ஒருவருக்கு விற்றதாக அமுதவள்ளி தெரிவித்துள்ளார். அதேவேளையில், கொல்லிமலையைச் சேர்ந்த மலைவாழ் ஏழை தம்பதிகளிடம் குழந்தைகளை வாங்கி, விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட அமுதவள்ளிக்கு, மேலும் பலர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் பிரசவங்கள் குறித்து, அங்குள்ள ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், அமுதவள்ளிக்கு  தகவல் தெரிவித்து வந்துள்ளார். அதன்படி கொல்லிமலையில் ஏழை பெண்களுக்கு பிறந்த 4 குழந்தைகளை வாங்கி, அதை ஈரோட்டை சேர்ந்த பர்வீன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீனை ஈரோடு போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், இதுவரை 9 குழந்தைகளை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனிடையே, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்குமார், நேற்று தலா 5 பேர் கொண்ட 2 குழுவை நியமித்துள்ளார். அவர்களில் ஒரு குழுவினர் ராசிபுரம் நகராட்சியில், கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கிய பிறப்பு சான்றிதழ்களை பெற்று, 2 தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு குறித்த ஆவணங்களை பெற்று சரிபார்த்தனர். இதில் ஆத்தூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஓராண்டில் மட்டும் 3 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

மற்றொரு குழுவினர் போலீசாருடன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசனை, கொல்லிமலைக்கு அழைத்துச்சென்று, குழந்தையை விற்றதாக கூறியவர்களிடம், நேரில் விசாரணை நடத்தினர். மேலும், மலை கிராமங்களில் வீடுகளில் பிரசவித்ததாக குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றவர்களின் விபரங்களை பெற்று, விசாரணை நடத்தினர். ராசிபுரம் மற்றும் நாமக்கல்லில் அமுதவள்ளியின் வங்கி கணக்குகளை பெற்று, அதில் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிமாற்றம் குறித்தும் விசாரித்தனர். ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை போலீசார், அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி சேலம் சிறையில் அடைத்தனர்.

போலி பிறப்பு சான்றிதழ் தயாரிப்பா?

நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘ராசிபுரத்தில் அமுதவள்ளி என்ற பெண், பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக வெளியான ஆடியோ குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, உரிய ஆதாரங்களுடன் எஸ்பியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அவ்வாறு போலியாக சான்றிதழ் தயாரிக்கப்பட்டிருந்தால், பிறப்பு  இறப்பு 1969 சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: