மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்தது. நாடாளுமன்ற தொகுதியில் 1787 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 2680 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்து அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரும் மே 23ம் தேதி வரை சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வகையில், மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு, அதற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர அங்குள்ள ஒரு அறையில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறை சீல் வைக்கப்படவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அந்த அறைக்கு அனுமதியின்றி உதவி கலால் ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் பெண் தாசில்தார் சம்பூரணம், ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேர் சென்று திரும்பி உள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அரசியல் கட்சியினர் நடத்திய தொடர் போராட்டத்தை தொடர்ந்து பெண் தாசில்தார் சம்பூரணம் உள்பட 4 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை. உயர்மட்ட விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர உத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: