ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவகாரம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையா?: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்கப்படுமா என்பது குறித்து நாளை நடக்கும் உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரியவரும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையத்தின் விசாரணை தற்போது, மாறுபட்ட கோணத்தில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பல தரப்பிலும் கூறப்பட்டது.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவமனை மீது தொடர்ந்து குறை கூறப்படுகிறது.

இதனால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை தரப்பில்  தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை 21 துறைகளை சேர்ந்த தன்னிச்சையான மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அந்த நிபுணர் குழுவை அமைக்கும் வரை ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்றம், முகாந்திரம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அப்போலோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போலோ மருத்துவமனை தரப்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர் ரோகிணி மூசா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில்  ஒரு கோரிக்கை வைத்தார்.

அதில், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக சிறப்பு நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து நாளை (இன்று) விசாரிக்க வேண்டும். அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம்  அனுப்பியுள்ள சம்மன் மற்றும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அப்போலோ மருத்துவமனை தரப்பு கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தேவையா அல்லது  அதற்கு தடை விதித்து சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைக்கலாமா என்பது குறித்து நீதிமன்றம் நாளை விசாரணை மேற்கொள்ளும் என உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: