தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு பொன்பரப்பியில் மறுவாக்குபதிவுக்கு உத்தரவிட வேண்டும்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாட்டில், பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக செய்தி தொடர்பாளர்  டி.கே.எஸ் இளங்கோவன் எம்பி, காங்கிரஸ் துணை தலைவர் தாமோதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக தீர்மானக்குழு தலைவர் அந்திரிதாஸ், சுப.வீரபாண்டியன், பேராயர் எஸ்ரா.சற்குணம், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராஜசேகரன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்ற ேகாஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், திருமாவளவன் தலைமை உரையாற்றி பேசியதாவது: பாஜகவிடமிருந்து அப்பாவி இந்துகளை காப்பாற்றியாக வேண்டும். பாமகவிடம் இருந்து அப்பாவி வன்னியர் சமூகத்தினரை காப்பாற்றியாக வேண்டும். இவர்கள் மீது நான் திடீரென கரினசம் காட்டுகிறேன் என்று எண்ணிவிடக்கூடாது. இவர்கள் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் துன்பத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை அம்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனது  கட்சியிலும், நான் கூட்டணி அமைத்திருக்கும் திமுகவிலும், இவ்வளவு ஏன்  நாட்டில் உள்ள எல்லா கட்சிகளிலும் முக்கிய அங்கம் வகிப்பது பெரும்பான்மை  சமூகத்தினரான இந்துகள். அந்தவகையில் நான் இந்துக்களுக்கு எதிரானவன்  என்று எப்படி சொல்லமுடியும். சிதம்பரம் தொகுதியில் எனது வெற்றி முக்கியமல்ல. ஜனநாயகம் தோற்கக்கூடாது என்பதுதான் முக்கியம்.

நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரி என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக, திமுக மட்டுமே பிரதான கட்சிகள். இதில் ஏதாவது  ஒன்றை வீழ்த்தி அந்த இடத்தை பிடிக்க துடிக்கும் பாமகவின் ஆசை  ஒருபோதும் நடக்காது. பாமகவின் புத்தி தெரிந்து தான் தேர்தல் நேர  பேச்சுவார்த்தையின் போது ஏலத்தை ஏற்றிவிடுவது போல ஏற்றிவிட்டு அதிமுக கூட்டணியில் பாமகவை இடம்பெற வைத்தார் மு.க.ஸ்டாலின். இதுதான்  ராஜதந்திரம். இன்று சக்சஸ்புல் லீடராக வலம் வருகிறார் மு.க.ஸ்டாலின். நான் எம்பியானால் பாமகவுக்கு ஏன் வயிறு எரிகிறது?. நான் ஒன்றும் அன்புமணி ராமதாஸ் போல நானும் ரவுடிதான், நானும்  சி.எம். ஆவேன் என்று கூவவில்லை. தலித் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள். உழைத்து வாழக்கூடியவர்களை சிதைத்தால் எப்படி. இந்த சம்பவத்தால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது திட்டமிட்டு நடந்த வன்முறை. இந்த சம்பவத்துக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். அதுவே சரியான தீர்வாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில்,‘‘ பொன்பரப்பியில் நடந்த சம்பவத்தை தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தவில்லை என்றால், பாஜவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளதா என்ற சந்தேகம் எழும். ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கிற இப்பிரச்னையில் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்’’ என்றார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘பொன்பரப்பியில் அரசியல் ஆதாயத்திற்காக பாமக திட்டமிட்டு வன்முறை உருவாக்கியது. எனவே அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வலியுறுத்தினோம் என்றார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், ‘‘ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே, பாமகவை ஒரு வன்முறை கட்சி என்று சுட்டி காட்டியிருக்கிறார். இன்னும் ஒரு சில வாரம் தான், எங்களுக்கு சாதகமாக அதிகாரிகளை செயல்படுங்கள் என்று சொல்லவில்லை. நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கையோடு சொல்கிறேன்’’ என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ேபசுகையில்,‘‘ தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே ஒருவர் வாக்குச்சாவடியை கைப்பற்றுங்கள் என்கிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் அப்படி சொல்ல மாட்டார்கள். ஜனநாயகத்தை ஏற்காத கட்சியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: