160 தீவிரவாதிகள் ஊடுருவல்?.. இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு பதற்றம்

* கொழும்பு அருகே வெடிகுண்டு தொழிற்சாலை கண்டுபிடிப்பு

* உளவுத்துறை தோல்வியால் பாதுகாப்பு செயலாளர் அதிரடி நீக்கம்

கொழும்பு: இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ள நிலையில், பயிற்சி பெற்ற 160 தீவிரவாதிகள் அங்கு ஊடுருவியிருப்பதாக வந்துள்ள உளவுத்துறை தகவலால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதோடு, கொழும்பு அருகே வெடிகுண்டு தொழிற்சாலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஓரிரு நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தனே அறிவுறுத்தி உள்ளார். குண்டுவெடிப்புக்கு முன்பாக உளவுத்தகவல்களை இந்தியா கொடுத்தும் அலட்சியமாக இருந்ததற்காக பாதுகாப்பு துறை செயலர், காவல்துறை தலைவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பிரார்த்தனை நடந்த 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், 45 குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பலியாயினர். உலகையே உலுக்கிய இக்கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு உதவியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இலங்கை பாதுகாப்பு படையினரும், சிஐடி மற்றும் போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாத பயிற்சி பெற்ற 160 தீவிரவாதிகள் இலங்கையில் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவல் கொடுத்திருப்பதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த தீவிரவாதிகள் உள்ளூரில் இயங்கும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக, அவர்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் பயிற்சி பெற்றவர்களும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தற்கொலைப் படையின் தலைவன் ஜஹ்ரான் ஹஸ்மியின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர். இலங்கையில் புத்தர் சிலை தாக்கப்பட்டது தொடர்பான விசாரணையின்போது, கடந்த ஜனவரியில்   வானதவில்லுவா பகுதியில் உள்ள 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தீவிரவாத பயிற்சி முகாம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இங்குதான் தற்கொலை படை தாக்குதல், ஆயுதங்களை கையாளுதல் போன்றவை குறித்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. தீவிரவாத தலைவன் ஹஸ்மி இம்முகாமுக்கு அடிக்கடி வந்து பயிற்சி அளித்துள்ளான். இங்கு

தீவிரவாத பயிற்சி பெற்றதாக 160 பேரை விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர். இதுதொடர்பாக, அரசுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை அவர்களை கைது செய்வதற்கான உத்தரவு உயர் அதிகாரிகளிடமிருந்து பிறப்பிக்கப்படவில்லை என அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போதும் இலங்கையின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த தீவிரவாதிகளால் மீண்டும் ஒரு பயங்கர தாக்குதல் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இது மட்டுமின்றி, குண்டுவெடிப்பை நடத்தியவர்களில் அடையாளம் காணப்பட்ட இன்சாப் அகமது என்பவரின் வெடிகுண்டு தொழிற்சாலையும் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்பு பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை என்ற பெயரில் இந்தத் தொழிற்சாலையில் இருந்து வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை மட்டுமே கடந்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த குண்டுகள் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகளின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி நீக்கம்:  குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியா தந்த  உளவுத்தகவல்களை அலட்சியப்படுத்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் தனது  நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, பாதுகாப்பு செயலாளர்  ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர்  பதவி விலக அதிபர் சிறிசேனா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.

 கடந்த 3 நாட்களாக மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தனே நேற்று பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டி கொடுத்தார். அவர் கூறுகையில், ‘‘மொத்தம் 9 பேர் மனித வெடிகுண்டாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உள்நாட்டைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பில் உள்ளவர்கள். இந்த தாக்குதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு (என்டிஜே) நேரடி தொடர்பில்லை என்றாலும், அந்த குழுவின் துணை அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது. என்டிஜேவிலிருந்து பிரிந்தவர்கள் இடம் பெற்றுள்ள அந்த அமைப்பு குறித்து தகவல்கள் திரட்டப்படுகின்றன.

மனித வெடிகுண்டாக வந்த 9 பேரில் 8 பேரின் அடையாளங்களை சிஐடி கண்டுபிடித்துள்ளது. கடைசி நபர், மனித வெடிகுண்டாக வந்த ஒருவரின் மனைவி ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள். இதில் ஒருவன், இங்கிலாந்தில் கல்லூரி படிப்பை முடித்து, ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயின்றுள்ளான். பணத்திற்காக இத்தாக்குதலில் அவர்கள் ஈடுபடவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. இத்தாக்குதலுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இன்னும் நிலைமை சீராகி விடவில்லை. எனவே அடுத்த ஓரிரு நாட்களுக்கு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்த 2 நாளில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும்’’ என்றார். இதற்கிடயே அதிபர் சிறிசேனா  தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.

கோவை ஐஎஸ் தீவிரவாதி தகவல் மூலம் எச்சரிக்கை

கோவையில் இந்து மத தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. அப்போது அவர்களுக்கு ஜஹ்ரான் ஹஸிமுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் ஹஸிமின் பிரசாரங்கள் அடங்கிய வீடியோக்களை அவர்கள் வைத்திருந்தனர். மேலும், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில், தேவாலயங்களையும், இந்திய தூதரகத்தையும் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு இலங்கையை எச்சரிக்கை செய்துள்ளது.

பலி 359 ஆனது

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 359 ஆக அதிகரித்தது. இதில் 10 பேர் இந்தியர்கள் ஆவர். பலியானவர்களில் 37 வெளிநாட்டினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 500 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யார் இந்த ஜஹ்ரான்?

இலங்கை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பு, இத்தாக்குதலை நடத்தியதாக 9 பேர் கொண்ட வீடியோ ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் 8 பேர் முகத்தை மூடிய நிலையிலும், ஒருவன் மட்டும் மூடாமலும் இருந்தான். முகத்தை மூடாத அந்த நபர் ஜஹ்ரான் ஹஸிம் என்றும் அவனே இக்குழுவின் தலைவன் என்றும் கூறப்படுகிறது. இவன் இலங்கையை சேர்ந்த மத பிரசாரகர். கட்டங்குடியை சேர்ந்த ஹஸிம் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தொடங்கி இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்துள்ளான். 3 ஆண்டுகளாகவே ஐஎஸ் அமைப்புடன் நெருக்கமான இருந்து வந்துள்ளான். இந்த சம்பவத்தில் ஜஹ்ரான் சம்மந்தப்பட்டுள்ள விஷயத்தை முன்கூட்டியே இந்திய உளவு அமைப்பான ரா இலங்கைக்கு தெரியப்படுத்தி உள்ளது.

பெயர் எழுதிவைத்து பைக் நிறுத்த உத்தரவு

வெடிபொருள் நிரப்பிய லாரியும், வேனும் கொழும்பில் ஊடுருவியிருப்பதாக ஏற்கனவே போலீசார் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, நேற்று வெலாவட்டா பகுதியில் சவாய் தியேட்டர் அருகிலும், பெட்டா பகுதியிலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பைக் நின்றிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு சென்று சோதனை செய்ததில், பைக் உரிமையாளர்கள் யாருமில்லை. இதனால், அந்த பைக்குகளில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே, 2 பைக்கையும் வெடிக்காமல் தடுக்கும் வகையில் நிபுணர்கள் அழித்தனர். இதைத்தொடர்ந்து, பொது இடத்தில் பைக்கை நிறுத்தும் போது அதில் பெயர், செல்போனை உரிமையாளர்கள் குறிப்பிடுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடைசி நிமிடத்திலும் எச்சரித்தது இந்தியா

இலங்கையில் தேவாலயங்களை குறிவைத்து பெரிய அளவில் தாக்குதல் சம்பவத்தை நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என இந்திய உளவு அமைப்புகள் இலங்கையை முன்கூட்டியே எச்சரித்துள்ளன. இதில் முதல் எச்சரிக்கை கடந்த 4ம் தேதியும், 2வது எச்சரிக்கை கடந்த 20ம் தேதியும் விடுக்கப்பட்டுள்ளது. பின்னர், கடந்த ஞாயிறு அன்று காலையில் கூட 3வது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒரு மணி நேரத்தில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருக்கிறது. 3 முறை இந்தியா எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசு அதை அலட்சியப்படுத்தி உள்ளது. அதே சமயம், இந்தியா 3 முறை எச்சரித்தும், இத்தகவல்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவே இல்லை என அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் கூறி வருகின்றனர்.

தீவிரவாதிகளான தொழிலதிபரின் மகன்கள்

 மனித வெடிகுண்டாக வந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட இன்சாப் அகமது இப்ராகிம், இல்ஹாம் அகமது இப்ராகிம் இருவரும் சகோதரர்கள். அதுவும், இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபரான முகமது யூசுப் இப்ராகிமின் மகன்கள் ஆவர். மசாலா உணவுப்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் முகமது யூசுப் அரசியல் பின்புலமும் கொண்டவர். முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவரும் கூட. இவரது மகன்கள் 2 ஓட்டல்களில் ஒரே நேரத்தில் குண்டுவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இப்ராகிம் சின்னமோன் ஓட்டலிலும், இல்ஹாம் ஷாங்கிரி ஷா ஓட்டலிலும் மனித வெடிகுண்டாக சென்றிருக்கிறார்கள். இதில் இப்ராகிமுக்கும் கும்பல் தலைவன் ஜஹ்ரானுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. கடந்த ஆண்டு புத்த சிலைகள் தாக்கப்பட்ட சம்பவத்திலும் இப்ராகிம் சம்மந்தப்பட்டிருக்கிறார். அவருக்கு சொந்தமான தொழிற்சாலையில்தான் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு சொந்தமான இடத்தில் தான் தீவிரவாத பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பலரில் இப்ராகிம் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களே அதிகம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: