அறிவியல் அதிசயத்தை சென்னை வாசிகள் இன்று காணலாம்: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பூஜ்ய நிழல்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 முதல் ஜூன் 21 வரை சூரியன் தென் திசையில் இருந்து வட திசையை நோக்கி பயணிக்கும். இது உத்தராயண காலம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று ஜூன் 22 முதல் டிசம்பர் 21 வரை சூரியன் வடதிசையில் இருந்து தென் திசை நோக்கி பயணிக்கும். இது தட்சணாயண காலம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த நிகழ்வு நடைபெறும்போது பூஜ்ய நிழல் நிகழ்வு ஏற்படுவது வழக்கம். பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நேர்கோடு அமைவதால் நமது நிழலானது நமது உடலின் நேர்கோட்டில் மிகச்சிறிய அளவில் தோன்றும்.  இதனால் நான் சாலையில் நின்று கொண்டிருக்கும்போது நமது காலடியில் சிறிய அளவில் மட்டுமே நிழல் விழும். இது பூஜ்ய நிழல் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.

Advertising
Advertising

இந்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி (இன்று) இந்த பூஜ்ய நிழல் தினமாக சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் அறிவித்திருந்தது. ஆனால், பூமியின் சுழற்சி காரணமாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதிகளில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களிலும் இந்த பூஜ்ய நிழல் நிகழ்வு அரங்கேறியது.  அறிவியல் ஆர்வம் கொண்ட சுற்றுலாப் பயணிகள் இந்த தகவலை சக சுற்றுலாப் பயணிகளுடன் பகிர்ந்து கொண்டு பூஜ்ய நிழல் எவ்வாறு, ஏன் ஏற்படுகிறது என்று விளக்கி வெண்ணெய் உருண்டை கல்லின் நிழல் சுற்றிலும் விழாமல் நேர்க்கோட்டில் விழுவது குறித்தும், பொதுமக்களின் நிழல் நீளமாக விழாமல் தங்கள் காலுக்கு கீழே விழுவதையும் காட்டி விளக்கினர். மேலும், கடற்கரை கோயிலின் கோபுரம், கலங்கரை விளக்கம் போன்ற புராதனச் சின்னங்களிலும் இந்த பூஜ்ய நிழல் நிகழ்வு நடைபெற்றது.

ஆனால், பூமியின் சுழற்சியில் ஒவ்வொரு இடங்களிலும் 10 நிமிட அளவிற்கு இந்த அரிய நிகழ்வு நீடித்ததால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளும், அறிவியல் ஆர்வலர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த அறிவியல் நிகழ்வு ஆண்டுக்கு இரு முறை நடைபெற்றாலும் சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தால் இதுகுறித்த விழிப்புணர்வு பரவி பலரும் இது பற்றி விவாதித்தனர். மேலும், இந்த நிகழ்வு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று ஏற்படும் என்றும் பொதுமக்கள் அதை துல்லியமாக காண முடியும் என்றும் அறிவியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: