மே 4ம் தேதி ‘கத்திரி’ வெயில் தொடங்கும்

* 26 நாட்கள் சுட்டெரிக்கும்  

* முதியோர், நோயாளிகள் எச்சரிக்கை

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நீடிக்கும். சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் என்னும் நட்சத்திர மண்டலப் பகுதிக்கு வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காலம் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி தொடங்கி குறைந்த பட்சம் 21 நாட்கள் அதிகபட்சம் 28 நாட்கள் வரை இருக்கும். கடந்த 2018ம் ஆண்டு கத்திரி வெயில் காலம் என்பது 28 நாட்கள் நீடித்தது. இந்த ஆண்டு  மே 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை அதாவது 26 நாட்கள் கத்திரி வெயில் காலம் நீடிக்கிறது.

கத்திரி வெயில் காலத்தின் தொடக்கத்தில் முதல் 7 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்று 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதற்கு பிறகு எப்படி வெயில் அதிகரித்ததோ அதே நிலையில் படிப்படியாக குறையத் தொடங்கும். கடந்த 2018ம் ஆண்டில் இந்த கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் தொடக்கத்தில் 100 டிகிரியில் தொடங்கி  108 டிகிரி வரை சென்றது.

குறிப்பாக திருத்தணி, வேலூர், கரூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் கத்திரி தொடங்குவதற்கு முன்னதாகவே, தமிழகத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் உச்சம் அடைந்துள்ளது. இதற்கிடையே, குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இது சற்று வெப்பத்தை தணித்தாலும், கத்திரி வெயில் காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்த கத்திரி வெயில் காலத்தில் உடலின் வெப்பம் அதிகரிக்கும். உடலின் வெப்ப இயக்கம் சரியாக இருக்காது. வயிற்றுப் போக்கு, இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கக்கூடும், காய்ச்சல், பொதுவான பலகீனம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வெயிலில் இருந்து பாதுகாப்பதுடன், வெயில் மற்றும் வெப்ப தாக்குதலில் தப்பிக்க வேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும்  டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: