உரிமை கோர விழிப்புணர்வு இல்லாததால் தொழிலாளர்களின் ரூ.10 கோடி நிதி வீணானது: 6 மாதத்திற்குள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்

சென்னை: தொழிலாளர்கள் உரிமை கோராத காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளில்  பல்வேறு நிறுவனங்கள் ரூ.10 கோடி நிதியை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு திருப்பி செலுத்தியுள்ளன. அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டது.

இதில் பல்வேறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் அடங்கும். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிலாளர் நல நிதியாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 செலுத்த வேண்டும். இதைப் போன்று தொழிலதிபர்கள் ஒரு தொழிலாளிக்கு ரூ.20 செலுத்த வேண்டும். அரசு தன்னுடைய பங்குத் தெகையாக ரூ. 10 செலுத்தும்.

இதன் மூலம்  தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. திருமண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்து தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி தேர்வுக்கான கட்டணம், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

தொழிலாளர் நல வாரியத்திலிருந்து தனது மகன் அல்லது மகள் கல்வி அல்லது திருமணத்துக்கு உதவி கேட்டு நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் பல தொழிலாளர்கள் விண்ணப்பித்த பிறகு பல்வேறு நிறுவனங்களுக்கு மாறி விடுகின்றனர். அதன் பிறகு அந்த நலத்திட்டத்தை ஏற்கனவே விண்ணப்பித்த நிறுவனத்தில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால், இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணம் மற்றும் நிறுவனங்கள் தொழிலாளர் நலத்திட்டம் குறித்து அவர்களிடம் எடுத்து கூற வேண்டும். ஆனால் யாரும் அதை சிரத்தை எடுத்து தொழிலாளிகளுக்கு வாங்கிச் செல்ல சொல்வதில்லை. இதனால் தொழிலாளர்களுக்கு அந்த நிதி வந்ததே தெரியாமல் போய்விடுகிறது.

அப்படி உரிமை கோரப்படாத தொகை தொழிலாளர் நல வாரியத்திற்கு திருப்பி வீணாக அனுப்பி ைவக்கப்படுகிறது. இதன்படி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.10 கோடி நல வாரியத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2016-2017ம் நிதி ஆண்டில் 389 நிறுவனங்களிடமிருந்து 3 கோடியே 97 லட்சத்து 85 ஆயிரத்து 427 ரூபாய் நல வாரியத்திற்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

இதைப் போன்று 2017-2018ம் நிதி ஆண்டில் 477 நிறுவனங்களிடமிருந்து ரூ. 6 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 924 கோடி நல வாரியத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த 2 ஆண்டுகளில் 10 கோடியே 42 லட்சத்து 48 ஆயிரத்து 351 கோடி நிதி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான தகவல்கள் மற்றும் தொழிலாளர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு சேர வேண்டிய தொகை உள்ளிட்ட தகவல்களை சம்பந்தபட்ட நிறுவனம் மற்றும் தொழிற்சாலையின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களின் பெயரில் ஏதாவது உரிமை கோராத தொகை உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: