கரும்பு விவசாயிகளின் ரூ.420 கோடி நிலுவை தொகை தரக் கோரி சர்க்கரை ஆலை உரிமையாளர் வீடுமுன் பிச்சை எடுப்பு போராட்டம்: சென்னையில் அய்யாகண்ணு உட்பட 40 பேர் கைது

சென்னை: கரும்பு விவசாயிகளின் ரூ.420 கோடி நிலுவை தொகையை தரக்கோரி தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டின் முன்பு மடியேந்தி பிச்சை கேட்டு போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் ஆரூரான் மற்றும் அம்பிகா என்ற பெயரில் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைக்கு கடலூர் மற்றும் தஞ்சை பகுதியை சேர்ந்த 5,830 கரும்பு விவசாயிகள் கடந்த 2017ம் ஆண்டு 14 லட்சம் டன் கரும்பு அனுப்பினர்.

அந்த வகையில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.420 கோடியை ஆலை நிர்வாகம் தர வேண்டும். ஆனால் இன்று வரை பணம் கொடுக்கப்படவில்லை. பல முறை விவசாயிகள் ஆலைகள் முன்பு பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் பணம் கிடைக்க வில்லை. இதையடுத்து சென்னை கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் உள்ள கடலூர் மற்றும் தஞ்சை ஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம் தியாகராஜன் வீட்டின் முன்பு நேற்று காலை 8.30 மணிக்கு தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலுவை தொகையான ரூ.420 கோடியை உடனே கொடுக்க வேண்டும் என்று மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்தவித முன் அறிவிப்புமின்றி நடந்த இந்த போராட்டத்தால் சிறிது நேரம் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோட்டூர்புரம் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆலை உரிமையாளர் எங்களிடம் வந்து நிலுவை தொகை தரப்படும் என்று உத்தரவாதம் அளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறி ஆலை உரிமையாளருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகளான சக்திவேல், கவியரசு, பால சுப்பிரமணியன் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் கோட்டூர்புரத்தில் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர். இந்த திடீர் போராட்டத்தால் கோட்டூர்புரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: