திமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: திமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு கே.எஸ்.அழகிரி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து, இந்த தேர்தலை சந்தித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில், காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. அந்த வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின், விரைவில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், மூத்த தலைவர்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அப்போது, 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். மேலும், நடந்து  முடிந்த தேர்தல் முடிவு மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்தும் மு.க.ஸ்டாலினுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது, மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

வெளியில் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து தேர்தலில் ஆற்றிய பணி குறித்தும், தேர்தல் முடிவு குறித்தும் விவாதித்தோம். ஏறக்குறைய அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக  உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சித்திறன் பலவீனமாக உள்ளது. தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதால் மோடியும், எடப்பாடியும் சோர்வாக உள்ளனர். வெற்றியைப் பற்றி அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்களுக்கு வெற்றியைப் பற்றிய நம்பிக்கை இருக்கிறது.

 உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். உள்ளாட்சி இல்லாத ஆட்சியை அதிமுக நடத்திக் கொண்டிருக்கிறது. நடைபெற இருக்கின்ற 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம். பொதுவாக எந்த ஒரு சாலை அமைப்பு திட்டத்திலும் காங்கிரஸ் ஆதரவு இருக்கும். ஆனால்  எட்டு வழி சாலை திட்டத்தில் சுய லாபம் அடையக் கூடாது. எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

பொன்பரப்பியில் நடைபெற்ற சம்பவம் அருவருக்கத்தக்க விஷயம். நாங்கள் அதை எதிர்க்கிறோம். நாளை பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரசின் முழு ஆதரவு உண்டு. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ஆசிய தடகள போட்டி 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு கோமதி மாரிமுத்து முதல் தங்கத்தை பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் இவர் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: