தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 26ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் மழைக்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் மழை: மக்கள் மகிழ்ச்சி

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் அதிகபட்சமாக 2 செ.மீ மழையும் , உதகையில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்பகல் முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மற்றும் ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட கிராமங்களில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சூறாவளியுடன் பலத்த மழை பெய்ததால் பல கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பெத்தநாயக்கன் பாளையம், சிங்கிபுரம், பேலூர், உள்ளிட்ட ஊர்களில் கனமழையால் பல மரங்கள் சாய்ந்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: