தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றம் முன்பு 3 வழக்கறிஞர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அங்கு பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறை கால அவசர அமர்வு கூடியது.

அப்போது தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து பேசினார். மேலும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றும், 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில், என் மீது கூறப்படும் இந்த புகார்கள் நம்ப முடியாதவை என்றும் தெரிவித்திருந்தார்.

அடுத்த வாரம் சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ளதால் என் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி நான் செயல்படுவேன் என உறுதியளித்திருந்தார். மேலும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும் நீதித்துறையின் சுதந்திரத்தை ஊடகங்கள் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றம் முன்பு 3 வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: