வாக்களிப்பதை கவுரவமாக கருதும் நிலை உருவாக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

சென்னை: வாக்களிப்பதை கவுரவமாக கருதும் நிலை உருவாக்க வேண்டும் என்றும் அந்த நாள்தான் உண்மையான ஜனநாயகம் மலரும் நாள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 38 தொகுதிகளிலும் சராசரியாக 71.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒப்பீட்டளவில் இது மனநிறைவளிக்கும் எண்ணிக்கை தான் என்றாலும் கூட, நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான வாக்காளர்கள் தங்களின் விலைமதிப்பற்ற வாக்குரிமையை செலுத்தத் தவறியதை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாக பார்க்க முடியவில்லை.

வாக்களிக்கத் தவறுவது குற்றம் என்ற சட்டம் 1777ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகானத்தில் நடைமுறைக்கு வந்து விட்டது. உலகில் 11 ஜனநாயக நாடுகள் உட்பட மொத்தம் 38 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாக்களிக்கத் தவறுவது குற்றமாக கருதப்பட்டு, பல வகைகளில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. அதேபோல், இந்தியாவிலும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம் பெயர்ந்து வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்ற குரல்கள் எழுகின்றன.

அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் வாக்களிக்கலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இம்மாற்றங்களை எளிதாக செய்ய முடியும்.

இந்திய ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம். இத்தகைய சூழலில் இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்த பொது விவாதத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்தலில் வாக்களிப்பதை சுமையாக கருதாமல் கவுரவமாக நினைக்கும் நிலை உருவாக வேண்டும். அந்த நாள் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் நாளாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: