ஓட்டு கேட்டு மக்களிடம் போகவே அசிங்கப்பட்டு நிற்கிறான் அதிமுக தொண்டன்: பாமகவில் இருந்து விலகி அமமுகவில் ஐக்கியமான நடிகர் ரஞ்சித் போட்டு உடைக்கிறார்

* அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

தேர்தல் பலத்திற்காக கட்சிகள் கூட்டணி சேர்வது வாடிக்கை. அந்தந்த நேரத்தில் கொள்கை அடிப்படையில் இது உருவாகும். ஆனால் பாமக செய்தது அப்படியா இருக்கிறது. அதிமுக அரசின் ஊழல், முறைகேடுகள், அடாவடிகளை கண்டு அவர்கள் மீது வழக்கு போட்டு, குற்றச்சாட்டு சொல்லி, அடிமைகள் ஆட்சி, முட்டாள்கள் அரசு, மானங்கெட்டவர்கள், டயர் நக்கிகள் என்று படுமோசமாக அர்ச்சனை செய்து, அக் கட்சியை எதிர்த்தே அரசியல் செய்தவர்கள் பாமகவினர். திராவிட கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது என்று பெரிய, பெரிய வார்த்தைளால் பேசி, தன்னை வீரன் போல் காட்டி விட்டு, திடீரென அந்த நிலைப்பாட்டை மாற்றி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். யாரை எதிர்த்து அரசியல் செய்தோமோ கடைசியில் அந்த சாக்கடையில் சங்கமம் ஆனது மிக

துரதிருஷ்டவசமானது.

* அமமுகவில் திடீரென சேர்ந்ததற்கு என்ன காரணம்?

நான் பதவிக்காக எல்லாம் அரசியலுக்கு வரவில்லை. அதிமுகவில் போனால், ஒரு மீட்டிங்கில் பேசினால் காசு கொடுப்பார்கள். எம்எல்ஏ, எம்பி ஆகலாம். ஏதாவது காரியம் சாதிக்க போகலாம். அது அரசியலில் ஒரு பிழைப்பு. அந்த மாதிரி காரியம் செய்பவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை. பாஜ நாட்டிற்கு தேவையில்லை என்று நமக்கு தோன்றுகிறது. அந்த பாஜவை தீர்க்கமாக எதிர்க்க கூடிய ஒரு தலைமை வேண்டும். அது ரொம்ப முக்கியம். நம் தமிழக நலன் உரிமையை மத்தியில் விட்டு கொடுக்காமல் இருந்தவர் ஜெயலலிதா. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இருந்திருந்தால் நான் அன்றைக்கே அதிமுகவில் சேர்ந்திருப்பேன். அவருக்கு பிறகு, அந்த உரிமையை விட்டு கொடுக்காமல் இருப்பவர் டிடிவி.தினகரன். அவருக்கு எத்தனையோ மிரட்டல் வந்தாலும் அதற்கு அடிபணியாமல் இருந்தவர். அவரை மிகச்சிறந்த தலைமையாக

பார்க்கிறேன்.

* டிடிவி.தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு உள்ளது. அதேபோன்று அமமுக மறைமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளாரே?

அரசியலில் வழக்கே இல்லாத ஒரு தலைவரை பார்க்க முடியுமா. அரசியல் சரியாக இருந்தால் எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போட்டு அவரை முடித்து விடுவார்கள். கரூர் அன்புநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கமானவர்கள் மீதான வழக்கு இப்போது எந்த நிலையில் இருக்கிறது. எந்த வழக்கிற்கு நீதி கிடைத்திருக்கிறது. நிலுவையில் உள்ள வழக்கு என்றால் நிறைய பேசலாம். எந்த வழக்கிற்கும் நீதி கிடைக்காது. அரசியலுக்காக வழக்கு தொடுப்பதும், அந்த வழக்கை உறுதி செய்வதற்கும், அவர்கள் மீது புகார் கொடுப்பதும் அதை வைத்து கூட்டணி சேர்ப்பதும் நடக்கத்தான் செய்கிறது. அன்புமணி மீது சிபிஐ வழக்கு எத்தனை ஆண்டுகள் நிலுவையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். கைது செய்ய வேண்டிய வழக்குகள் நிறைய உள்ளது. நம்ம ேதவைக்கான சதுரங்க விளையாட்டு தான் அரசியல். ஓடுற குதிரையின் காலை உடைப்பதே இந்த வேலை. இந்த சதுரங்க விளையாட்டில் நடக்கிற சண்டை சட்ட ரீதியாக மாறி விட்டது. வழக்கு போட்டாலும் அதை எதிர்த்து டிடிவி.தினகரன் கட்டாயம் மீண்டு வருவார்.

* அதிமுக கூட்டணியை எதிர்ப்பது ஏன்?

ஒரு தொண்டன் தன் கட்சிக்காக ஓட்டு கேட்பதை அவமானமாக நினைக்கிறான் என்றால் அது அதிமுகவில்தான். நீட் தேர்வு, ஜிஎஸ்டியால் ஓட்டு கேட்க சங்கடப்படுகிறான். கொங்கு மண்டலத்தில் தொழில் அழிவதற்கு ஜிஎஸ்டிதான் காரணம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானியன் பல கொடுமைகளை அனுபவித்தான். கஜா புயல் பாதிப்பிற்கு அதிமுக கூட்டணி ஒன்று கூடவில்லை. ஆனால், நோட்டிற்காக இந்த கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. நான் தேனி மக்களவை தொகுதியில் பிரசாரத்திற்கு சென்றேன்.  அங்கு ஒரு ஓட்டிற்கு ரூ. 10 ஆயிரம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஒரு தொகுதிக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கியதாக கேள்விப்பட்டேன். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். உண்மையில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் வித்திடவில்லை என்றால், இந்த மாநிலம் எத்தியோப்பியா, சேமாலியா போல் வறண்ட மாநிலமாக

ஆகி விடும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: