நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் காற்றில் பறந்தது குடியால் சீரழியும் குடும்பங்கள்; குற்றங்களும் அதிகரிப்பு

* இந்தியாவில் ஆண்டுக்கு 2.60 லட்சம் பேர் பலி

* அதிகாரிகள் ஆசியோடு போலிகள் புழக்கம்

வேலூர்: இந்தியாவில் மது குடிப்பதால் ஆண்டுக்கு சராசரியாக 2.60 லட்சம் பேர் பலியாகின்றனர். இதனால் ஏராளமான குடும்பங்கள் சீரழிவதோடு, குற்றங்களும் அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இன்றைக்கு நாட்டையே உலுக்கி கொண்டிருப்பது மதுபோதை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை செய்வதிலும், மது குடிப்பதிலும் எந்தவித விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் இருக்கிறது. இதனால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் முழுமையாக காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளும் மதுபோதைக்கு அடிமையாகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிர்ச்சி வீடியோக்களே இதற்கு சாட்சி. மேலும் பெரும்பாலான குற்றங்கள் குடிபோதையில்தான் அரங்கேறி இருக்கிறது. நாட்டில் அரங்கேறும் கொலை, பலாத்காரம் போன்ற சம்பவங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் குடிபோதைக்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய குற்ற ஆணைய தகவலின்படி, இந்தியாவில் ஒரு நாளில் 293 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடப்பதாக தெரியவந்துள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முன்னிலை வகிக்கிறது. இதுதவிர இளம்பெண்களை கூட்டு பலாத்காரம் செய்வது, கொலை செய்வது, கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறும் கொலைகள் என்று நீளும் குற்றங்களின் பட்டியலில் பெரும்பாலான குற்றங்கள் குடிபோதையில்தான் அரங்கேறி இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி தகவல். இதுபோன்று குடிபோதைக்கு அடிமையானவர்களில் 50 சதவீதம் பேர் அடுத்தக்கட்டமாக கஞ்சா உள்ளிட்ட போதைகளை தேடிச் செல்ல தொடங்கிவிடுகின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2.60 லட்சம் பேர் மதுப்பழக்கத்தால் பலியாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்று பலியானவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

ஒரு சில குடிமகன்கள் மனைவி சம்பாதிக்கும் பணத்தை பிடுங்கிச் சென்று மது குடித்த சம்பவங்களும், தாலியை அடகு வைத்து மது குடித்த சம்பவங்களும் சாதாரணமாக நடக்கிறது. இதைவிட கொடுமை மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால், தந்தையை கொலை செய்தவர்களும், தாயை கொலை செய்தவர்களும், மனைவியை கொலை செய்தவர்களும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்று குடிபோதையால் குற்றங்கள் ஒருபுறம் அதிகரிப்பதோடு, லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வருவதால் மது ஒழிப்புக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனால், போராடுபவர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே அரசு தீவிரம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த ஒடுக்குமுறையில் தமிழகம்தான் முதலிடம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடிக்கு மேல் டாஸ்மாக் மதுவிற்பனையில் வருவாய் கிடைக்கிறது. என்னதான் வருமானம் கிடைத்தாலும், உயிர் பலிவாங்கும் இந்த துறையை ஊக்குவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கேள்வியாக இருக்கிறது. எனவே, மதுவை ஒழிப்பதோடு, மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் பல ஆண்டு கோரிக்கை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: