விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம் : மலையாள புத்தாண்டான விஷு பண்டிகையை ஒட்டி இன்று மாலை சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் விஷூ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருட சித்திரை விஷூ பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. விஷூ பண்டிகையை ஒட்டி சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால்,

பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டி இன்று மாலை சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்து தீபாராதனை நடத்தினார். நாளை (11ம் தேதி) காலை 5 மணிக்கு நடை திறந்து சிறப்பு பூஜைகள் தொடங்கும்.

ஏப்.15ம் தேதி சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு விஷூ கணி தரிசனம் நடத்தப்படும். அன்று காலை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தந்திரியும், மேல்சாந்தியும், விஷூ கை நீட்டம் அளிப்பார்கள். அதைத்தொடர்ந்து 19ம் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம் நடக்கும். 19ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: