ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடியில் விவிபேட் சீட்டை சரிபார்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: உடனடியாக அமலாகும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு, ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒப்புகை சீட்டுகளை(விவிபேட்) சரிபார்க்கும் முறையை, 5 வாக்குச்சாவடிகளாக உயர்த்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதை உடனடியாக அமல்படுத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் பதிவு செய்யும் ஓட்டுக்களை, சரிபார்க்க வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள்(விவிபேட்) தற்போது பொருத்தப்படுகின்றன. ஓட்டு போட்டபின், விவிபேட் இயந்திரத்தில் வெளிவரும் சீட்டில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம். இந்த சீட்டுகள் வாக்குச்சாவடியிலேயே மீண்டும் சேகரிக்கப்படும்.

பதிவான ஓட்டுக்களுடன், விவிபேட் சீட்டுகளின் எண்ணிக்கை ஒத்துப் போகிறதா என ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியின் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம் பின்பற்றி வருகிறது.  ஆனால் 50 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் மனு செய்தனர். இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ‘‘50 சதவீத வாக்காளர் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்தால் தேர்தல் முடிவுகள் வெளியிட 5.2 நாட்கள் தாமதம் ஏற்படும். மேலும், விவிபேட் சீட்டுகள் எண்ணுவதை அதிகரிப்பதற்கு, தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பின்பற்றும் நடைமுறைகளை மாற்றுவது சாத்தியம் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘மக்களவை தேர்தலில் 50 சதவீத விவிபேட் சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் முடிவுகள் 6 நாட்கள் தாமதமானால் பரவாயில்லை. தேர்தல் நடைமுறை நேர்மையை இது உறுதி செய்தால், 6 நாட்கள் மிகப்பெரிய தாமதம் இல்லை. விவிபேட் சீட்டுகளை எண்ணும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், தாமதத்தை மேலும் குறைக்கலாம்’’ என கூறியிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 50 சதவீத விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஆனால் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியில் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கும் முறையை, 5 ஆக உயர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணயை செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளும் எடுக்கும்’’ என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: