தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறதா? டிஜிபி, ஐஜிக்கள், கலெக்டர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

* கண்டுகொள்ளப்படாத திமுக, எதிர்கட்சிகள் மனு

* வருமான வரி சோதனையிலும் பாரபட்சம் என புகார்

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதால் போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர்களை மாற்ற வேண்டும் என்று திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், 3 வாரங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேநேரம் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்படுகின்றனர். இதனால் தேர்தல் ஆணையம் மத்திய, மாநில அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையும் தமிழகத்தில் ஒருதலைபட்சமாகவே உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அதேநேரம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 50 ஆயிரத்துக்கு மேல் வாகனங்களில் பணம் எடுத்துச் சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்கிறார்கள். அதன்படி நேற்று வரை தமிழகத்தில் 105 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம், வருமான வரித்துறையினர் முக்கிய புள்ளிகளின் வீடுகளை தேடிதேடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் வருமான வரித்துறையினர், ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்துவதாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதே கருத்தை கடந்த 3 நாட்களுக்கு முன் தமிழகம் வந்திருந்த இந்திய தேர்தல் ஆணையர்களிடமும் புகார் மனுவாக அளித்துள்ளனர். அதேபோன்று தமிழகத்தின் டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள், சேலம் கலெக்டர் உள்ளிட்ட சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக திமுக சார்பில் ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் புகார் மனு அளித்தனர். குறிப்பாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் குட்கா ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்.  ஓய்வுபெற்ற பிறகும் தமிழக அரசு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி உள்ளது. அப்படி இருக்கும்போது அவருக்கு கீழ் பணியாற்றும் தமிழக போலீஸ் அதிகாரிகள் எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும் என்பதே கேள்வியாகும்.

இதுபோன்ற அதிகாரிகளை மாற்றினால் மட்டுமே தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடத்த முடியும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் தேர்தல் ஆணையம் இதுபற்றி கண்டுகொள்ளவில்லை. அதேநேரம், ஆந்திராவில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி தலைமை செயலாளரையும், கொல்கத்தாவில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாற்றி உள்ளது. இந்த இரண்டு மாநில அரசுகள் மத்திய பாஜ அரசுக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது. அதன் காரணமாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று இரண்டு மாநில முதல்வர்களும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணியில் இருப்பதால் எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்தும் இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “சென்னையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய கூட்டாளி வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது. அங்கு ₹16 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் தேர்தலுக்காக விநியோகம் செய்ய வைத்திருந்த பணம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதுபற்றி செய்தி வந்ததும், மேலிடத்தின் நெருக்கடி காரணமாக தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக இது தேர்தலுக்காக வைக்கப்பட்ட பணம் இல்லை என்று கூறியது. ஆனால் அந்த பணமான 16 கோடியை தேர்தல் கணக்கில் கைப்பற்றதாக சேர்க்கப்பட்டது. தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் இல்லையென்றால் ஏன் அந்த பணத்தை தேர்தல் கணக்கில் சேர்க்க வேண்டும். இதேபோன்று, முதலில் வேலூரில் திமுக முன்னணி தலைவர் வீட்டில் முதல் நாள் சோதனையில் 10 லட்சம் மட்டுமே இருந்ததாக கூறினர். பின்னர் அடுத்தநாள் வேறு ஒரு இடத்தில் பணத்தை எடுத்ததாக கூறுகிறார்கள்.

அதேபோன்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு நெருக்கமானவர்களிடம் வருமான வரி சோதனை நடத்துகிறது. இப்படி எதிர்க்கட்சிகளையே குறி வைத்து சோதனை நடத்துவது முறையான நடவடிக்கை இல்லை.

அப்படியென்றால் ஆளுங்கட்சி அமைச்சர்கள், வேட்பாளர்கள், அவர்களது உறவினர்கள் வீட்டில் பணமே இல்லையா? நாங்கள் இதுபற்றி வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் ஆதாரத்தோடு புகார் அளித்தால்கூட சோதனை போட மறுக்கிறார்கள். இன்னும் தேர்தல் நாள் நெருங்கும்போது போலீஸ் அதிகாரிகளை வைத்தும், மாவட்ட கலெக்டர்களை வைத்தும் பணம் விநியோகம் செய்ய ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால்தான் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்களை மாற்ற வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்கவில்லை.

இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: