ஜிப்சி திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜிப்சி திரைப்படத்திற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கிற்கு தயாரிப்பாளர் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் ஜி.தினேஷ். இவர், சென்னையில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நான் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் உள்ளேன். மேலும்  பல திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கி வருகிறேன். இந்நிலையில் என்னிடம் கடந்த 2014ம் ஆண்டு விருகம்பாக்கத்தை சேர்ந்த அம்பேத்குமார் என்பவர் பப்பாளி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரூ.40 லட்சம்  கடன் கேட்டிருந்தார். பின்னர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.40 லட்சம் பணம் கொடுத்தேன். இந்த தொகையை அவர் 3 மாதங்களில் வட்டியுடன் திருப்பி தந்துவிடுவதாக தெரிவித்தார். பப்பாளி திரைப்படத்தை தவிர வேறு  எதற்கும் பணத்தை பயன்படுத்த கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொண்டோம். பப்பாளி படம் வெளியிடப்பட்டது. இருந்தும் அம்பேத்குமார் பணத்தை திருப்பி தரவில்லை.

இந்நிலையில் ஜிப்சி என்று பெயரிடப்பட்ட திரைப்படம் அம்பேத்குமார் தயாரிப்பில் வெளியாக உள்ளதாக விளம்பரங்களில் பார்த்து தெரிந்துகொண்டேன். நான் கொடுத்த பணத்தை இந்த திரைப்படத்திற்கும் பயன்படுத்தி உள்ளனர்.  எனவே வட்டியுடன் எனக்கு தரவேண்டிய ரூ.45 லட்சத்தை கொடுக்காமல், ஜிப்சி திரைப்படத்தை வெளியிடக்கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு 12வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தயாரிப்பாளர் அம்பேத்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு  தள்ளிவைத்தார். ஜிப்சி திரைப்பட இயக்குனர் ராஜூவ்முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் தயாரிகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: