ஜெ.மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை இல்லை: அப்பல்லோ கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்க தடைக்கோரிய அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில்  சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் தமிழக அரசு அமைத்தது. இந்த  விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.  2017-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்தை விசாரணைக்கு வருமாறு அழைத்தது. அதை நிராகரித்த அப்பல்லோ நிர்வாகம் உயர்நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறியது  நினைவிருக்கலாம். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அவர்களில் பலர் பலமுறை ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 3 ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.  அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க மனுவில் அப்பல்லோ சார்பில் கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் வாக்குமூலங்களை ஆணையம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு  தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், ஆர்.விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி இறுதிக்கட்டத்தில் இருக்கும் விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என்று வாதாடினார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் வரம்புக்கு உட்பட்டே விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரிக்க சிறப்பு மருத்துவர் குழு அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அப்பல்லோ மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: