ஹர்திக் பட்டேலின் சிறை தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கு : விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பட்டேல் சமுதாய தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு தற்போது உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஹர்திக் பட்டேலின் சிறை தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க கோரியதையும் ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னதாக குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிதார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தை துவக்கி நடத்தி வந்தார் ஹர்திக் பட்டேல்.

கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 5000 ஆதரவாளர்களுடன் ஹர்திக் படேல் விஸ்நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரிஷிகேஷ் படேலின் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கலவரம் ஏற்பட்டு ரிஷிகேஷ் படேலின் அலுவலக சொத்துகளையும் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 17 பேர் மீது விஸ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஹர்திக் படேல், லால்ஜி படேல் மற்றும் ஏ.கே படேல் ஆகிய மூவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவரது சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும், அவர் குற்றவாளி என்ற தீர்ப்பு ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஹர்திக் பட்டேல் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியானது. இதனையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து குஜராத்தை ஆளும் பாஜக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரித்தது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது. இதனையடுத்து குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். ஆனால் அவரது மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஹர்திக் பட்டேலின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க தற்போது உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: