‘மீண்டும் மோடி பிரதமர்’ என்று சர்ச்சை பேச்சு; ராஜஸ்தான் ஆளுநர் பதவிக்கு ஆபத்து?

லக்னோ: ‘மீண்டும் பிரதமராக மோடி தேர்வு செய்யப்படுவதை மக்கள் விரும்புகின்றனர்’ என, ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் உத்தரபிரதேசத்தில் பேசியதால், அவரது பேச்சு குறித்த உண்மை அறிக்கை கேட்டு உத்தரபிரதேச மாநில தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில ஆளுநரான கல்யாண் சிங், பாஜ கட்சியின் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர். இவர், கடந்த 23ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘ஒவ்வொருவரும் பிரதமர் மோடியே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கருதுகின்றனர். அதுவே நாட்டிற்கு தேவை என்றும் விரும்புகின்றனர்’ என்று தெரிவித்தார்.

ஆளுநராக பணியில் உள்ள கல்யாண் சிங், தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது. அதைதொடர்ந்து, உத்தரபிரதேச மாநில தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையம் உண்மை அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ராஜஸ்தான் மாநில ஆளுநரான கல்யாண சிங், அலிகாரில் நடந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் பேசிய விபரங்கள் குறித்து, உண்மை அறிக்கையை உரிய ஆதாரங்களுடன் சமர்பிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளது. அதனால், ஆளுநர் பேசிய விபரங்கள் குறித்து வீடியோ, ஆடியோ விபரங்களை மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

 

முன்னதாக கடந்த 1990ம் ஆண்டுகளில் இமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்த குல்ஷீர் அகமது, தனது மகனான சயத் அகமதுக்கு மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பிரசாரம் ெசய்தார். அதனால், தேர்தல் ஆணையத்துக்கு சென்ற புகாரை தொடர்ந்து ஆளுநர் குல்ஷீர் அகமது, தனது அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தியதாக கூறி, அவரை ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஏற்பட்டது. அப்போது, தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், மீண்டும் பிரதமராக மோடி தேர்வு செய்வது குறித்து, தேர்தல் நடத்தை விதிமீறல் மற்றும் அரசுப்பணியில் இருந்து கொண்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநில தேர்தல் அதிகாரியின் உண்மை அறிக்கையை பொறுத்தே, அடுத்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: