மாம்பழத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: பாமகவினர் அதிர்ச்சி!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாம்பழத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டதால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார் திண்டுக்கல் சீனிவாசன். அமைச்சரின் சொந்த தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டிய பதற்றம் திண்டுக்கல் சீனிவாசனிடம் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மக்களவை தொகுதி பாமக வேட்பாளரான ஜோதிமுத்துவை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர், இப்படை தோற்கின் எப்படை வெல்லும். நமது கூட்டணி வேட்பாளர் ஜோதிமுத்துவுக்காக ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள். மாம்பழம் சின்னத்துக்கு பதில் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கூறியதால், பின்னால் இருந்த அமைச்சரின் உதவியாளரும், கூட்டத்தில் இருந்தவர்களும் மாம்பழம் சின்னம் எனக் கோஷமிட சிரித்துக் கொண்டே தலையில் லேசாக தட்டிக் கொண்டு மாம்பழச் சின்னம் எனக் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மேடையில் அமர்ந்து இருக்கும்போதே ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுமேடைகளில் உளறுவது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த வாரம் திண்டுக்கல்லில் நடந்த கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் மோடியின் பேரன் ராகுல் காந்தி என்று உளறியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: