சென்னை: மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதால் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று வலியுறுத்தி திரைப்பட இயக்குநர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கையில் முன்னனி இயக்குநர் வெற்றிமாறன் உள்பட 111 இயக்குநர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அபாயகரமான மோடி அரகுசு மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடாது என்று அறிக்கையில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புவியியல் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களாக பிரிந்திருந்தாலும், பல்வேறு கலச்சாரங்களுடன் கோடிக்கணக்கான மக்கள் ஒற்றுமையுடன் வாழும் அழகான நாடு இந்தியா என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஃபாசிச சக்திகளால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால், அதனை தடுக்க, தவிர்க்க மக்களவை தேர்தல் தான் கடைசி வாய்ப்பு என்று திரைப்பட இயக்குநர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.