திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் ஒருவர் பலி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமரம் மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் ஒருவர் பலியானார். 20 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே நெடுமரம் மலையரசி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நெடுமரம், என்.புதூர், சில்லாம்பட்டி, ஊர்க்குளத்தான்பட்டி, உடையநாதபுரம் ஆகிய கிராமத்தினர் சார்பில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. கிராமத்தினர் மலையரசி அம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு சாமியாட்டம், மேளதாளத்துடன் ஊர்வலமாக தொழுவிற்கு வந்தனர். தொழுவிற்கு 100க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டன. தொழுவில் உள்ள மஞ்சுவிரட்டு காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று மாடுகளை பிடித்தனர். மாடுகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாடு முட்டியதில் படுகாயமடைந்த திருப்புத்தூர் அருகே புதுக்காட்டம்பூரை சேர்ந்த அருளானந்தம் (55) என்பவரை திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைகாக சிவகங்கை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருளானந்தம் உயிரிழந்தார்.

முன்னதாக திருப்புத்தூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அலங்கரித்து மாலை, துண்டு கட்டி கொண்டுவந்து காலை 11 மணியளவில் நெடுமரம், பகுதியில் உள்ள கண்மாய் பகுதி, வயல்காட்டுப் பொட்டல் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. அப்பகுதியில் கூடியிருந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர். மஞ்சுவிரட்டை காண பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: